பெருமாள் பெயரில் ஒரு நூதனத் தீண்டாமை!
’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது. பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது. மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும். அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!
வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு. உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர். அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை’ போன்றது. மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
கோயில் கதவுகளை மூடி, வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன. இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர். கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!
இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!
வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன். பொறுத்திருக்கவும்.
எ.அ.பாலா
பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.
11 மறுமொழிகள்:
test comment
பாலா,
மிகவும் உடனே கவனிக்க வேண்டிய நூதனத் தீண்டாமை இது ,சனாதிபதிக்கு மனுக்கொடுத்து போராடி தீர்வு கண்டே ஆக வேண்டும் அவ்வ்!
வவ்வால்,
வாங்க :) நூதனத் தீண்டாமை என்பது பரபரப்புக்கு, வாசிக்க அழைக்க வைத்த தலைப்பு, அஷ்டே !
நீங்க பிற்சேர்க்கையை பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இதன் இரண்டாம் பாகத்தை சீக்கிரம் எழுதுகிறேன். அப்போது ”அவ்வ்” என்று சொல்ல மாட்டீர்கள் என்று தோன்றுகிறது :)
இந்த இரண்டு கோவிலிலும் அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணிபுரிகிறார்கள் என்று நம்புவோமாக..
வாங்க TBCD, டிவிட்டர்ல பேசி நாளாச்சுது :)
//இந்த இரண்டு கோவிலிலும் அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணிபுரிகிறார்கள் என்று நம்புவோமாக..//
இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால், இது குறித்து என் நிலைப்பாட்டை 2009-இல் இந்த இடுகையில் சொல்லியிருக்கிறேன். நன்றி.
http://balaji_ammu.blogspot.in/2009/08/548.html
kodumai kodumainu kovilukku pona anga oru kodumai dhingu dhingunnu aadura kathaiyai poche ithu.Perumaloda nethila irunthu vantha sathiyil ippadi vada kilai konjam melayum then kilai konjam keezhayum akippoyi ippadi sandayila irukkum pothu, pathathila irunthu vantha sathikku niyayam enga kidaikka pokuthu?
கடவுள் படைத்த மனிதனுக்குள்ளும் தீண்டாமை மனிதன் படைத்த கடவுளுக்கும் தீண்டாமை, எங்கு போய் முடியுமோ? கடைசியில் கடவுளையே சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் தான் காப்பற்றணுமோ? :/
கடவுளுக்குப் பிரச்சனை சட்டமன்றம் போகிறார்களே!
நமக்குப் பிரச்சனையானால் நாம் ஏன் கடவுளிடம் போகிறோம்.
எத்தனைகாலம் தான் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது என கூறப் போகிறார்கள், இத் தறிகெட்ட கபோதிகள்.
Thulasidharan V Thillaiakathu,
இந்த மாதிரி குணம் கெட்டவர்கள் செய்யும் பிரச்சினைகளும், அலம்பல்களும், உண்மையான பக்தர்களை கொடுமைக்கு உள்ளாக்குகின்றன என்ற உங்கள் கருத்து சரியே!
விவரணன் நீலவண்ணன்,
//கடவுள் படைத்த மனிதனுக்குள்ளும் தீண்டாமை மனிதன் படைத்த கடவுளுக்கும் தீண்டாமை, எங்கு போய் முடியுமோ? கடைசியில் கடவுளையே சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் தான் காப்பற்றணுமோ? :/
//
நிலைமை அப்படித்தான் உள்ளது.
யோகன் பாரிஸ்(Johan-Paris),
//இத் தறிகெட்ட கபோதிகள்.//
ஆமாம், பக்தி என்ற போர்வையை அணிந்த, அறிவுக்கண் இன்னும் திறக்காத கபோதிகள் உள்ளனர்.
Post a Comment